Thursday, 5 September 2013

சித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியம்...!

சித்தர் திருமூலர் அவர்கள் தான் எழுதிய திருமந்திரத்தில் செம்பினைப் பொன்னாக்கும் வழிமுறையினை எளிதாக, தெளிவாக எழுதியுள்ளார்.

திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் 903ஆம் பாடலைக் காண்போம்.

செம்புபொன் னாக்குஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்புபொன் னான திருவம் பலமே.

இப்பாடலில் திருமூலர் சிவாயநம என்று செபிக்க செம்பு பொன்னாகும் என்று சொல்கிறார். அதாவது சிவாயநம என்று சிவ சிந்தனையில் இருப்பவர்களால் செம்பினைத்தங்கமாக மாற்ற இயலும் என்கிறார். இறைசிந்தனை தவிர மனத்தில் வேறெதுவும் இல்லாமல் சிவசிந்தனையில் சிவாயநம சிவாயநம என சிந்தித்து இருப்பவர்கள் செம்பை பொன்னாக்க முடியும் என்கிறார்.

இங்கே செம்பு பொன்னாகுதல் என்றால் என்ன என்பதையும் சற்று சிந்திப்போம். செம்பு என்பது களிம்பு உண்டாகும் உலோகமாகும். களிம்பு உருவாகாத அளவுக்கு செம்பினை சுத்திப்படுத்திவிட்டால் அது தங்கமாக ஆகிவிடும்.

இப்பாடலில் வெளிப்படையாக செம்பைப் பொன்னாக்குதல் என்னும் (உலோக) இரசவாதம் தெரிகிறது. அதே சமயம் இப்பாடலில் மறைபொருளாக உள்ள ஓர் உயரிய இரகசியம் என்னவென்றால் செம்புபோல களிம்பேறி நோய்நொடிக்கு உள்ளாகி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிடும் உடம்பினை தங்கமாக்கி, இறவா நிலைக்கு, பேரின்ப நிலைக்கு உயர்த்துவது சிவாயநம எனும் சிவ பஞ்சாட்சரமே என்பதாகும். இது உடலின் இரசவாதம், உயிரின் இரசவாதமாகும்.

905 ஆம் பாடலிலும் இதனை மீண்டும் வலியுறுத்தி எழுதுகிறார்.

வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

சிவாயநம என செபித்துவர பிறப்பில்லை. சிவனின் நடனத்தைக் (தரிசனத்தைக்) காணலாம். செம்புநிலையிலுள்ள உயிரானது குற்றங்கள் நீங்கி தங்கத்தின் நிலைக்கு உயரும் என்று எழுதுகிறார்.

அதாவது செம்பினைப் பொன்னாக்கினால் அதனால் என்ன பயன் ஒருவர்க்கு உண்டாகுமோ அத்தகைய பயனைப் பெற சிவாயநம என ஓதுவது போதுமானதாகும். அவ்வாறு தினமும் சிவசிந்தனையிலிருந்து சிவாயநம என ஓதி வந்தால் நிச்சயம் பொன்கிடைக்கும். பொன்னுக்கு நிகரான நன்மைகள் உங்களைவ வந்து சேரும். உங்கள் உடலும் பொன் உடம்பென ஆரோக்கியமான, பலமான உடலாக மாறும். உடலின் குற்றங்கள் நீங்கி நலம்பெறும்.

No comments:

Post a Comment