Tuesday, 10 September 2013

காஞ்சி நகர வரலாறு:-

காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளுர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பல்லவர்கள் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது.
"
நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.
புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவனது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், பரமேஸ்வர விண்ணகரம் என்னும் விஷ்ணு ஆலயத்தைக் கட்டினான். அதே மன்னனே, தற்காலிகமாக சமண சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமண பாரம்பரியம் காஞ்சியில் வளர பங்காற்றினான். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.
பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்ட போரில் இராபர்ட் கிளைவ், ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டான். இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறான். 

No comments:

Post a Comment