Tuesday 10 September 2013

கல்வி உளவியல்

             
நிலம் மாறினாலும் நிறம் மாறாத செல்வம் கல்வி. 

கற்றவர்களே கண்ணுடையவர்களாக மதிக்கப்படும் காலம் இது. 

மனிதனைச் சிந்திக்கச் செய்வது கல்வியின் அடிப்படை நோக்கமாகும். 

தொல்காப்பியரும், பிராய்டும் உளவியலின் முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்களாக மதிக்கப்படுகின்றனர். 

இவ்விருவரின் வழியில் நான் மாணவர்களிடம் கற்ற உளவியல் கூறுகள், என்னைப் போன்ற கல்வியாளர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கில் பதிவு செய்ய விரும்புகிறேன். 
1.
ஆசிரியரின் கண்கள் மாணவர்களைத் தம் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். 

2.
சில ஆசிரியர்கள் ஆண்கள்பக்கமோ, பெண்கள் பக்கமோ, நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பக்கமோ திரும்பி பிற மாணவர்களை நோக்காது பாடம் நடத்துவர். இச்சூழலில் மாணவர்கள் உள்ளத்தால் வகுப்பை விட்டு வெளியே சென்று விடுகின்றனர்.உடல் மட்டுமே அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 

3.
ஆசிரியரின குரல் ஒலி அளவு எல்லா மாணவர்களுக்கும் கேட்குமாறு ஏற்ற இறக்கங்களுடன் இருத்தல் வேண்டும். 

4.
ஆசிரியர் தாம் சொல்லவந்த கருத்துக்களை முழுவதும் வெளிப்படுத்த தேவைக்கேற்ப உடல் அசைவு மொழிகளைக் கையாளவேண்டும். 

5.
பாடத்தோடு தொடர்புடைய செய்திகளையும் இடையிடையே சொல்ல வேண்டும். 

6.
பாடத்தை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திச் உரைக்க வேண்டும். 

7.
பெரிய கருத்துக்களையும் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளச் செய்வன நகைச்சுவைகளும், சின்னக் கதைகளும் என்பதை ஆசிரியர் மனதில் கொள்ள வேண்டும். 

8.
பாடத்திற்கு ஏற்ப கரும்பலகை, பவர்பாயின்ட், ஒலி, காணொளி, கணினியின் துணைகொண்டு விளக்கமுறைகளைக் கையாளவேண்டும். 

9.
மாணவர்களிடையே வினாக்களை எழுப்ப வேண்டும். அவர்கள் தவறாகச் சொன்னாலும் அவர்களின் குறைகளை அவர்களுக்குப் புரியவைத்து மீண்டும் சொல்ல ஊக்குவிக்கவேண்டும். 

10.
 பாராட்டுஆசிரியர் கையிலிருக்கும் மிகப் பெரிய ஆயுதம் என்பதை ஆசிரியர் நினைவில் கொள்ளவேண்டும். 

11.
ஆசிரியர்கள் திட்டுவதாலோ, தண்டனை தருவதாலோ மாணவர்களைத் திருத்திவிடமுடியாது என்பதை உணர்ந்து, அன்பாகப் பேசி அவர்களுக்கு அவர்களின் தவறைப் புரியவைக்க வேண்டும். 

12.
மாணவர்கள் மதிப்பெண் வாங்குவதைவிட அப்பாடப் பொருள் குறித்த ஆர்வமும், போதிய அறிவும், படைப்பாக்கத்திறனும் கொண்டவர்களாக உருவாக வேண்டும் என்பதை ஆசிரியர் புரிந்துகொள்ள வேண்டும். 

13.
மாணவர்கள் தம் துறை சார்ந்து புதியன படைக்க ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருத்தல் வேண்டும். 

14.
அந்தக் காலத்தில மாணவர்கள் வகுப்பு வேளையில் அலைபேசியை வைத்து குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள், இன்று நவீன தொழில்நுட்பத்துடனான அலைபேசிகளில் முகநூலில் (பேஸ்புக் சாட்) அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையிலிருந்து நாம் அந்த அலைபேசியைப் பறிப்பது எளிது. ஆனால் அதைவிட நம்மை ஏமாற்றி அவர்கள் வகுப்பு வேளையில் அதனைப் பயன்படுத்துவது அதைவிட எளிது. அதனால் காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்களும் அவர்களின் மனநிலையையும் அறிவுத் திறனையும் புரிந்து கொண்டு அவர்களே அதனைப் புறந்தள்ளும் விதமாக புதிய தொழில்நுட்பங்களுடன் பாடம் நடத்த வேண்டும். அச்சூழலில் அவர்களே அந்த அலைபேசிகளைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். 

15.
இவை எல்லாவற்றுக்கும் மேலே மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்க வேண்டிய பெரும் பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது. 

மாணவர்கள் வெள்ளைத் தாள்! 
அதில் ஆசிரியர் என்ன எழுதினாலும் அப்படியே பதிகிறது!! 

No comments:

Post a Comment