சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’ என்று பெயரிட்டேன்” என்றார்.
இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.
‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.
ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.
புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.
எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.
மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.
நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..
No comments:
Post a Comment