Thursday, 12 June 2014

மனித குலத்தின் உடனடி கவனத்திற்கு!



கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மருத்துவ சாதனை என்று போற்றப்படுவது நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்தான "ஆன்டிபயாடிக்'. 1950இல் ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகமானதற்கு முன்புவரை, சிறிய வெட்டுக் காயம், தொண்டைப் புண் போன்ற உபாதைகள்கூடப் பலரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தன. "பாக்டீரியா' என்று பரவலாக அறியப்படும் நுண்ணுயிரிகளும் நச்சுயுரிகளும் (வைரஸ்) பேரழிவை ஏற்படுத்தி வந்தன.

ஆன்டிபயாடிக்கின் வரவு, மனித குலத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்றி இருக்கிறது. ஆன்டிபயாடிக் மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்தால், சாதாரண விஷக்காய்ச்சல்கூட அதிவேகமாகப் பரவி, கொத்துக் கொத்தாக மனித உயிர்களை பலி கொண்டிருக்கும். 1950க்கு முன்னால் பிளேக், காலரா போன்ற நோய்கள் அசுர வேகத்தில் பரவி பல்லாயிரம் கிராமங்களில் உயிரினங்களும் வாழ்ந்த சுவடே இல்லாமல் அழிந்த சரித்திரப் பதிவுகள் ஏராளம், ஏராளம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எது மனிதனின் அற்புதக் கண்டுபிடிப்பாகவும், இயற்கையை வென்ற அறிவியல் சாதனையாகவும் கருதப்பட்டதோ, அதே ஆன்டிபயாடிக் இப்போது தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ) சமீபத்தில் நடத்திய சர்வதேச ஆய்வின் முடிவுகள் "ஆன்டிபயாடிக்'கின் வீரியத்தை முனை மழுங்கச் செய்து, எந்தவித சிகிச்சைக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகள் அதிவேகமாக உருவாகிக் கொண்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

கடந்த அறுபது வருடமாக உபயோகத்தில் இருப்பதால், நுண்ணுயிரிகளில் சில காலப்போக்கில் ஆன்டிபயாடிக் மருந்திற்குத் தங்களுக்குத் தாமே எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. எப்படி நமது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் வெள்ள அணுக்கள் மூலம் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி அழிக்க முயற்சிக்கிறதோ, அதேபோல, நுண்ணுயிரிகளும் ஆன்டிபயாடிக் சிகிச்சைக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்க முற்பட்டிருக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது ஆரம்ப கட்டமாக இருப்பதால் ஆன்டிபயாடிக்குக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உடைய நுண்ணுயிரிகள் அதிக அளவில் இல்லை. ஆனால், இவை தொடர்ந்து ஆன்டிபயாடிக் சிகிச்சையை எதிர்கொள்ள எதிர்கொள்ள, எதிர்ப்பு சக்தியுடைய நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து, ஆன்டிபயாடிக் மருந்துகளை பயனற்றவையாக்கிவிடும் அபாயம் ஏற்படக்கூடும். இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட முக்கியமான காரணம், இருமல், சளி, சாதாரண காய்ச்சல், கை கால்களில் முறிவு, உடலில் பல்வேறு பாகங்களில் ஏற்படும் கொப்புளங்கள் போன்றவற்றை மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மாத்திரை, ஊசி மருந்து மூலம் குணப்படுத்த முற்படுவதுதான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நோயாளிகளும் சரி, உடனடியாக குணமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆன்டிபயாடிக் சிகிச்சையை விரும்புவதும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது லாபத்துக்காக ஆன்டிபயாடிக் தயாரிப்புகளை மருத்துவர்களிடம் முனைந்து பரிந்துரைப்பதும்கூட இந்த நிலைமைக்குக் காரணங்கள். அதேபோல, நோய் குணமடைந்ததும், "ஆன்டிபயாடிக்' சிகிச்சை முழுமையாகாத நிலையில் மருந்து உட்கொள்வதை நோயாளிகள் நிறுத்தி விடுவதும்கூட நுண்ணுயிரிகள் ஆன்டிபயாடிக்குக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வழிகோலுகின்றன.

தனியார் மருத்துவ வசதிகள் அதிகரித்திருப்பதுகூட, அதிகமான ஆன்டிபயாடிக் உபயோகத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. 2011இல் வெளியாகி இருக்கு உலக சுகாதார நிறுவனப் புள்ளி விவரப்படி, இந்தியாவில் 53% பேர் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அதிக லாபம் கிடைக்கும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு ஆன்டிபயாடிக் மாத்திரைகளை மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்கள், மருத்துவமனனைகள், மருந்துக் கடைகள் மூலமாக விற்பனை செய்ய ஊக்குவிப்பதால் ஏற்பட்டிருக்கும் பிரச்னை இது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறுது.

இந்த நிலைமை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஆன்டிபயாடிக் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் அதிகரித்து விடாமல் கட்டுப்படுத்துவது, அணு ஆயுதத் தடுப்பைவிட முன்னுரிமை தர வேண்டிய ஒன்று. இல்லையென்றால் கடந்த நுற்றாண்டின் முற்பகுதியைவிட மோசமான நிலைக்கு மனித குலம் தள்ளப்படும். சாதாரண வெட்டுக் காயம், சளி இருமல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும். ஆன்டிபயாடிக் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் அதிகரித்து விட்டால், பிளேக், காலரா காலத்துக்கு உலகம் திரும்பக் கூடும்,

ஜாக்கிரதை!