Friday 25 October 2013

புதிய இட்லி வகைகள் (குஷ்பு இல்லை)


DSC09117 புதிய இட்லி வகைகள் (குஷ்பு இல்லை)
காய்கறி இட்லி

தேவையான பொருட்கள்
இட்லிகள்- 8
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 1
குடமிளகாய்- 1
காரட்- 1
வேக வைத்த பட்டாணி- ஒரு கப்
பூண்டு- 2 பல்லு
உப்பு- தேவையான அளவு
சாம்பார் பொடி- 1 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி- அலங்கரிக்க

தாளிக்க

நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:
1. இட்லிகளைத் தயார் செய்து கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் பூண்டையும் துருவிப் போட்டு அல்லது பொடியாகத் திருத்திப் போட்டு வதக்கவும்.
3. குடமிளகாயையும் பொடிதாக நறுக்கிக் கொண்டு, மற்ற காய்கறிகளையும் சேர்த்து உப்பு, சாம்பர்பொடி(சாம்பார் பொடிக்குப் பதில் காரப்பொடியும் போடலாம், சிறிதாகப் போட வேண்டும்) போட்டு வதக்கவும். 
4. காய்கள் வெந்தவுடன் சிவப்பு நிறக் கேசரி கலரைச் சிறிதளவு தூவி கலக்கவும். 
5. கொத்தமல்லியைத் தூவி இட்லிகளைச் சிறு துண்டுகளாக்கிக் கொண்டு காய்கறிக் கலவையுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது சுவையான சூடான வித்தியாசமான காய்கறி இட்லி தயார்.
6.காரம் அதிகமாகி விட்டால் இட்லித்துண்டுகள் சேர்த்துக் கோள்ளலாம். இல்லையென்றால் எலுமிச்சைசாறு சிறிதளவு விட காரம் கட்டுப்படும்.
கூடுதல் செய்திகள்:
1. வெறும் இட்லியா என்று அலறுபவர்களுக்கு இப்படி இட்லிகளையே வித்தியாசமாகவும் சுலபமான முறையிலும் சமைத்துக் கொடுத்தால் விரும்பி உண்ணுவர்.
2. திடீர் விருந்தாளிகளைச் சமாளிக்கவும் காலையில் மீந்த இட்லிக்களை வியாபாரம் செய்யவும் உகந்த சிற்றுண்டி.
3. காய்கறிகளைச் சேர்க்காமல் இட்லி மிளகாய்ப் பொடியைச் சேர்த்து மிளகாய்ப் பொடி இட்லி செய்யலாம்.


தயிர் இட்லி
தேவையான பொருட்கள்
இட்லிகள்- 10
அரைக்க:
தேங்காய்- 1/2 டம்ளர் 
பச்சைமிளகாய்- 2
சீரகம்- 1/2 டீஸ்பூன்
தயிர் – 1 டம்ளர் 
இஞ்சி- 1/2 துண்டு 
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:
1. அரைக்கத் தேவையானவற்றை அரைத்துக் கொள்ளவும்.
2. இட்லிகளைச் சிறு துண்டுகளாக்கி அரைத்த கலவையில் ஊற விட்டு கொத்தமல்லியைத் தூவி விடவும்.
3. வித்தியாசமான ருசியுடன் தயிர் இட்லி நாக்கைச் சப்புக் கொட்ட வைக்கும்.



DSC09122 புதிய இட்லி வகைகள் (குஷ்பு இல்லை)

மசாலா இட்லி
தேவையான பொருட்கள்
இட்லி- 8
பட்டை, சோம்பு,ஏலக்காய்- சிறிதளவு
இஞ்சி- 1 துண்டு
கறிவேப்பிலை- 1 இணுக்கு
தேங்காய்- 1/4 டம்ளர்

தாளிக்க:
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை
1. இட்லிக்களை ஓரளவு பெரிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மிக்ஸியில் தேங்காய், கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி, பச்சைமிளகாய் இஞ்சி, பட்டை சோம்பு மசாலாப் பொருட்களைச் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
3. தாளிக்கத் தேவையானவற்றைத் தாளித்துக் கொண்டு அரைத்தக் கலவையைப் பச்சை வாடை போக வதக்கவும். இதனுடன் நறுக்கிய இட்லித்துண்டுகளைச் சேர்த்து வதக்கி எடுக்க சுவையான மசாலா இட்லி தயார். மசாலா சேர்க்கப் பிடிக்காதவர்கள் கொத்தமல்லி, கறிவேப்பில்லை தூக்கலாகச் சேர்த்து இதே முறையில் செய்து கொத்தமல்லி இட்லியாக அமர்க்களப்படுத்தலாம். பச்சை நிறத்தில் அசத்தும் இந்த இட்லிக்கு போட்டா போட்டி தான் போங்கள்.

இனி இட்லி மீந்தால் உப்புமா கிண்டவோ, வேறு என்ன செய்யலாம் என்றோ யோசிக்க மாட்டேங்க தானே? காய்கறி(சில்லி) இட்லி, மிளகாய்ப்பொடி இட்லி, மசாலா இட்லி, கொத்தமல்லி இட்லி, தயிர் இட்லி என்று வித விதமா செய்து குடும்பத்தினரையும் விருந்தினரையும் அசத்திடுங்கள்.

No comments:

Post a Comment