நரேந்திர மோடியின் புகழ் இணையதள உலகிலும் கொடிகட்டிப் பறப்பது கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இருந்து தெளிவாகிறது.
இந்தப் பட்டியலின்படி இணையதளத்தில் மிக அதிகமாக தேடப்படும் அரசியல் தலைவராக பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இருக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் முதல் இவரைப் பற்றி மிக அதிகமானவர்கள் தேடி வருவதாக கூகுள் நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிடித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.

தென்னிந்திய நடிகர்களில் விஜய் முதலிடம்
கூகுள் இணையதளத்தில் 2013 -ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகராக சல்மான்கானும், நடிகையாக காத்ரினா கைஃபும் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
2013ம் ஆண்டு தங்கள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை கூகுள் இணையதளம் வெளியிட்டு ள்ளது. இதில் ‘டாப் டிரென்டிங்’ பட்டியலில் முதல் இடத்தினை ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் பிடித்திருக்கிறது. ‘டாப் டிரென்டிங்’ என்பதற்கு கூகுள் இணையத்தில் அதிகமாக பேசி, விவாதிக்கப்பட்ட விஷயம் என்று அர்த்தமாகும். இந்த பட்டியலில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு அடுத்த இடத்தை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் ‘ஆஷிகி - 2’ திரைப்படம் உள்ளது.

மக்கள் தேடிய சன்னி லியோன்
ஒட்டுமொத்த இந்தியாவில் மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர், சன்னி லியோன். உலகப் புகழ்பெற்ற போர்னோ பட நடிகையான இவர், சமீப காலமாக இவர் இந்தித் திரையுலகில் உறுதுணை நடிகையாகவும், ஒற்றைப் பாடலுக்கு வலம் வருபவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சல்மான் கானும், மூன்றாம் இடத்தில் கத்ரீனா கைஃபும் இடம்பெற்றுள்ளனர். காஜல் அகர்வால் 7-ம் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 9-வது இடத்திலும் உள்ளனர்.
கத்ரினா கைஃப்
அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகைகள் பட்டியலில் கத்ரீனா கைஃப் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடங்களில் தீபிகா படுகோன், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ஷாரூக் கான், ரண்பீர் கபூர், அக்‌ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதிகமாக தேடப்பட்ட தென்னந்திய நடிகர்கள் பிரிவில் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவரைத் தொ டர்ந்து அஜீத், ரஜினி காந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்டில் இருந்து இந்த ஆண்டு ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர், இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரராக இருக்கிறார். அதிலும் கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு அவரைப் பற்றிய விவரங்களை அதிகம் பேர் தேடியிருப்பதாக கூகுள் வலைதளம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மில்கா சிங், டோனி, லியோனல் மெஸ்ஸி, ரோஜர் பெடரர் ஆகியோர் இவருக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.
மிக அதிகமாக தேடப்பட்ட ஒட்டு மொத்த பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் சல்மான் கானுக்கு இரண்டாவது இடமும், காத்ரினா கைஃபுக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது.

விஜய் முதலிடம் வந்தது எப்படி?
கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்திற்கு வந்ததற்கு ‘தலைவா’ படப் பிரச்சினைதான் முக்கிய காரணம் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது. ‘தலைவா’ படம் வெளியாகத் தாமத மானதைத் தொடர்ந்து அரசுடன் அவருக்கு பிரச்சினை என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து வலைத்தளங்களிலும் அப்படத்தைப் பற்றியும், விஜய்யைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதோடு பல்வேறு அரசியல் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
அரசியல் சார்ந்த படம், வெடி குண்டு மிரட்டல்கள் என 'தலைவா' படத்தைப் பற்றி அதிகமாக விவாதிக்கப்பட்டதும் அவரைப் பற்றி இணையதளத்தில் தேட முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் இந்தி பாக்ஸ் ஆபிஸில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ வசூல் சாதனைகளை படைத்தி ருப்பது அப்படம் அதிகமாக விவாதிக்கப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது